பயிர்க் கடனை தள்ளுபடி செய்யக்கோரி டிச.20ல் தொடர் காத்திருப்பு போராட்டம்
பயிர்க் கடனை தள்ளுபடி செய்யக்கோரி டிச.. 20ம் தேதி முதல் சேலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.;
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியில் சேலம் மாவட்டத்தில் விதிமீறல் என்ற தவறான குற்றச்சாட்டில் 49 ஆயிரம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஜனவரி 14ம் தேதி தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகை கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாய் நின்ற விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது. அவர் ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆன பொழுது இல்லாத காரணங்களை கூறி கடைப்பிடிக்க இயலாத காரணங்களை அறிவித்து விதிமுறை மீறல் என்று வகைப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் விவசாயிகளை கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியில் இருந்து நிராகரிக்கப்பட்டு உள்ளார்கள். அதற்கு விதிமுறை மீறல் என்று காரணம் கூறியுள்ளனர்.
இதேபோல ஈரோடு திண்டுக்கல் திருப்பூர் விதிமீறல் என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு லட்சத்து 5 ஆயிரம் விவசாயிகளில் 49ஆயிரம் விவசாயிகள் விதி மீறல்கள் என்ற காரணத்தைக் கூறி கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்காமலும், மறு கடன் வழங்காமலும் நீதி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பலமுறை அமைச்சரிடம் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி முதல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.