தள்ளுபடி கடனை திரும்ப செலுத்த நிர்பந்தம்: வரும் 18ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு கடன் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடனை திரும்ப செலுத்த விவசாயிகளை நிர்பந்தப்படுத்துவதற்கு கண்டனம்..
விவசாயிகளின் நலன் கருதி கடந்த மார்ச் 31ஆம் தேதி முடிவுற்ற காலத்தில் பெற்ற பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்வதாக தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்தநிலையில் பயிர் கடன் வழங்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக கூறி கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் நிர்பந்திக்கப்படுவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், விதிமீறல் என்ற பெயரில் விவசாயிகள் நிர்ப்பந்திக்கப் படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும் அதே வேளையில் புதிய பயிர் கடன் வழங்கவும் மறுக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே தமிழக முதலமைச்சர் அறிவித்த படி பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி செய்து புதிய பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 18ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.