சேலத்தில் நேரடி தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சேலத்தில் கல்லூரி மாணவர்கள் நேரடி தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதி வந்த நிலையில், தற்பொழுது அண்ணா பல்கலைகழகம் ஆன்லைன் தேர்வை ரத்து செய்து நேரடி தேர்வை எழுத வேண்டும் என அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பாடம் நடத்திவிட்டு தற்போது நேரடி தேர்வு அறிவித்துள்ளது. மாணவர்கள் வாழ்வை கேள்விக்குறியாகும். எனவே நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் தேர்வை அமல்படுத்த வலியுறுத்தி சேலம் அனைத்து மாணவர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.