சேலம் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் பாய், தலையணையுடன் குடியேறும் போராட்டம்
அடிப்படை வசதி செய்து தராத மாநகராட்சியை கண்டித்து சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் பாய், தலையணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி 37 கோட்டத்திற்குட்பட்ட மாருதி நகர் அப்துல்கலாம் நகர் , ஒந்த பிள்ளை காடு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் செய்து தராமல் உள்ளதை கண்டித்து இன்று அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாய் தலையணை, வீட்டு உபயோக பொருட்களுடன், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாய் தலையணையுடன் வந்த பொதுமக்கள் மண்டல அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், எங்கள் பகுதி மழைநீர் தேங்கி உள்ளதால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் உடனடியாக அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதியை செய்து தர வேண்டும் எனும் கோரிக்கை முன்வைத்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் கைவிடப்பட்டது.