பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை, சேலத்தில் நடைபெற்றது.;
சர்வதேச இயற்கை பேரிடர் பாதிப்பு குறைப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மழை காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்திடவும், பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒத்திகை நடைபெற்றது.
குறிப்பாக, மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்படுகின்ற தீ விபத்துகள், சாலை மற்றும் கட்டிட விபத்துகளின் போது பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
மேலும், இயற்கையின் சீற்றங்களின் போது ஏற்படுகின்ற புயல், மழை,வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து செயற்கையாக ஏற்படுகின்ற பேரிடர் பாதிப்புகள் வரை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் மிதவை படகுகள், உயிர்காக்கும் மிதவை உபகரணங்கள், கட்டிட இடிபாடுகளின் போது அவசரகால மீட்பு இயந்திரங்கள்,மரம் அறுக்கும் இயந்திரங்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்ட நவீன இயந்திரங்களைக் கொண்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.