சேலத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எமதர்மன் வேடமணிந்து விழிப்புணர்வு
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எமதர்மன் வேடமணிந்து கயிறை அவர் மீது வீசி போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இதில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை நிறுத்தி அவர்கள் மீது எமதர்மர் வேடமணிந்த நபர் பாசக்கயிறு விசி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இருவரும் ரோஜாப்பூ மற்றும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.