லஞ்ச ஒழிப்பு சோதனை: 6 லாக்கர் சாவிகள் நீதிமன்ற அனுமதி பெற்று சோதனை
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் வீடுகளில் கைப்பற்ற பட்ட 6 லாக்கர் சாவிகள் நீதிமன்ற அனுமதி பெற்று திறந்து சோதனை செய்யப்பட்டது.
சேலம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் (57), அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இளங்கோவனும் (57), அவரது மகன் பிரவீன்குமார் (27) ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, இளங்கோவன், அவரது மாமானார் சாமமூர்த்தி, சகோதரி ராஜகுமாரி உள்பட உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமாக சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், புத்திரகவுண்டம்பாளையம், திருச்சி, சென்னை உள்பட சில மாவட்டங்களில் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல கோடி ரூபாய் பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 6 லாக்கர்களின் சாவிகளை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர்.பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று மாலை சேலம் அயோத்தியபட்டனம் நகர கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகளில் 6 லாக்கர்களை திறந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்தனர்.