சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2 நாள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

Update: 2021-12-16 11:00 GMT

சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. வங்கிகளை பாதிக்கும் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் வரை பங்கேற்று உள்ளதால், இன்றும் நாளையும் வங்கி பரிவர்த்தனை பணிகள் எதுவும் நடைபெறாது என்றும், இதனால் சுமார் ஆயிரம் கோடி அளவில் பண பரிவர்த்தனை பாதிக்கும் என்றும் வங்கி ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News