சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 35,617 மனுக்கள்
சேலம் மாவட்டத்தில் மூன்று நாட்களில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 35,617 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.;
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. தாலுகா வாரியாக நடந்த இந்த முகாமில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முதல் நாளான கடந்த 17ஆம் தேதி தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, சேலம் தெற்கு ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டத்தில் 15,227 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 18 ஆம் தேதி ஓமலூர், மேட்டூர், காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி யில் நடந்த முகாமில் மூலமாக 14,625 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.
நேற்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, மற்றும் சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு 9,271 கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். கடந்த மூன்று நாட்களில் 35,617 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் , வருவாய்த்துறை சான்றிதழ்கள், முதியோர், விதவை மற்றும் ஆதரவற்றோர் மாதாந்திர உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ரேஷன் கார்டு, தொகுப்பு வீடுகள், அடிப்படை வசதிகள், கேட்டு ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. இவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.