சேலம் மாவட்டத்தில் 2,414 போலியோ சொட்டு மருந்து முகாம்
சேலத்தில் காலை முதலே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிச் செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்றைய தினம் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சேலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 2,414 முகாம்கள் மூலம் 3,66,590 குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 3500 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெற்றோருடன் பயணம் செய்யும் குழந்தைகள் சொட்டு மருந்து வழங்குவதற்கு வசதியாக முக்கியமான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சோதனைச்சாவடிகள் போன்ற இடங்களில் கோவிட் 19 வழிகாட்டி நடைமுறைப்படி போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.