சேலம் சிவதாபுரம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய 20 ஏக்கர் விளை நிலம்
தொடர்மழை காரணமாக சேலம் சிவதாபுரம் பகுதியில் 20 ஏக்கர் விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நன்பகல் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டுப் பெய்தது. இதன் காரணமாகத் தாழ்வான சாலைகள் வெள்ளக்காடாக மாறின. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மேட்டூரில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் 2.4 சென்டி மீட்டர் மழை பெய்தது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி எல்லைப்பகுதியில் உள்ள சிவதாபுரத்தில் சுமார் 20 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து ஏரிபோல காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளம், நெல், கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
கடந்த 15 ஆண்டுகளாக மழைக்காலங்களில் சிவதாபுரம் பகுதியில் இதேநிலை நீடிப்பதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், முதல்வரின் தனிப்பிரிவு என பல புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.
மேலும், தேங்கி நிற்கும் மழைநீரால் பயிர்கள் பாதிக்கப்படுவதோடு டெங்குகாய்ச்சல் பரவும் சூழலும் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.