சேலம் மரவனேரியில் 11 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் பயணம்
சேலம் மரவனேரியில் 11 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்தான்.;
சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய சிறுவன்.
தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் அருள் என்பவரின் 11 வயது மகன் சரண் தேவ் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். இவர் கண்களை கட்டிக்கொண்டு எண்கள் மற்றும் புகைப்படங்களை கூறி சாதனை செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு சமர்ப்பிக்கும் விதமாக ஏற்காடு அடிவாரம் பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இந்த சைக்கிள் பயணத்தை சேலம் வடக்கு காவல் துணை ஆணையாளர் மாடசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அடிவாரம் பகுதியில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம் கோரிமேடு அஸ்தம்பட்டி 5 ரோடு ஜங்ஷன் புதிய பேருந்து நிலையம் வழியாக 20 கிலோ மீட்டரை கடந்து காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு செய்தார். 1மணிநேரம் 3 நிமிடம் 26 வினாடிகளில் இந்த சாதனையை புரிந்துள்ளார். இவருக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் உலக சாதனை பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி வழங்கி கௌரவித்தார்.