சேலத்தை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்-மேயர் வேட்பாளர் உறுதி
சேலத்தை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன் என்று மேயர் வேட்பாளர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் 46 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் இடத்தை திமுக பெற்றுள்ளது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் இருவரும் திமுகவில் தங்களை இணைந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் திமுக உறுப்பினர்களின் பலம் 48 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி மேயர் பொறுப்பிற்கு சேலம் அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளரான 6 கோட்டத்தில் வெற்றி பெற்ற ராமச்சந்திரனை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேயர் வேட்பாளராக அறிவிக்கபட்டவுடன், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதே போன்று மாவட்ட செயலாளரும் மேயர் வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ராமச்சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின் படி, செயல்பட்டு, சேலம் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.