சேலத்தில் அம்பேத்கர் சிலையோடு வந்து பதவி ஏற்ற விசிக கவுன்சிலர்
சேலம் மாநகராட்சியில் அம்பேத்கர் சிலையோடு விசிக கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டார்.
சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். சேலம் மாநகராட்சி 44வது கோட்டத்தில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் இமயவர்மன் வெற்றி பெற்றதையடுத்து அவர் இன்று பதவி ஏற்பு விழாவுக்காக அம்பேத்கரின் உருவ சிலையோடு மாமன்ற கூட்டத்திற்கு வந்தார்.தொடர்ந்து பதவி ஏற்கும்போது அம்பேத்கர் சிலையை மேசையின் முன்வைத்து அம்பேத்கர் மீது ஆணையிட்டு அவரது வழிகாட்டுதலின்படி இந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ஏற்று கொள்வதாகவும், அவரது நடவடிக்கைகள் மற்றும் கோட்பாட்டை வழி நடத்த போவதாகவும் உறுதி கூறி கண்ணீர் மல்க பதவியேற்று கொண்டார். 60 மாமன்ற உறுப்பினர்களில் இவர் சற்று வித்தியாசமாக பதிவி ஏற்றுக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சார்ந்தவர்கள் இதுபோன்ற மாமன்ற உறுப்பினராக ஆக முடியுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த எங்களை போன்ற வர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் எழுதிய சட்டத்தின் காரணமாகவும் இடஒதுக்கீட்டின் காரணமாகவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள போவதாகவும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களை வழிநடத்திச் செல்லும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.