சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரை நீக்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரை நீக்க வேண்டும் என அம்பேத்கர், அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சி குழு உறுப்பினர்களாக இருந்த நடராஜன் மற்றும் பாலகுருநாதன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 2 பேராசிரியர் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து ஏற்கனவே ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த பெரியசாமி மீண்டும் ஆட்சிக்குழு உறுப்பினராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலை கழக மரபுப்படி ஒருவர் ஒரு முறைக்கு மேல் ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்க முடியாது என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பெரியசாமி மீது போலி சான்றிதழ், பதிப்புத்துறை மோசடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, நிலத்தகராறு போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக பெரியசாமியின் ஆட்சிக் குழு நியமனத்தை ரத்து செய்து அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தின் சாசன விதிகளுக்கு உட்பட்டு எவ்வித சட்டவிதி மீறலும் இன்றி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.