சேலம் மாவட்டத்தில் 'சரக்கு' வாங்க எல்லை தாண்டும் மதுப்பிரியர்கள்!
சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள், எல்லை தாண்டிச் சென்று மது வாங்கி குடித்து, தங்களது தாகத்தை தணித்துக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, சேலம் நாமக்கல், தஞ்சை, நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு புதிதாக தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில், உரிய வழிகாட்டுதலின் படி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள், அருகில் இருக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்ட மாவட்டங்களின் ஊர்களுக்கு மது வாங்குவதற்கு படையெடுத்து செல்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டார மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்ட எல்லையோரத்தில் தம்மம்பட்டியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதர்பேட்டை, உப்பிலியாபுரம் ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் செல்கின்றனர்.
அதேபோல் அயோத்தியப்பட்டினம், வலசையூர் பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் தர்மபுரி எல்லை பகுதியாாான காளிப்பேட்டை பகுதிக்கும், ஓமலூர், தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் தர்மபுரி எல்லை பகுதியான தொப்பூர் பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று, தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். எப்படியோ மது கிடைத்ததே என்று சந்தோஷத்தில், உற்சாகம் பொங்க மதுப்பிரியர்கள் குஷி அடைந்துள்ளனர்.