பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுபானங்கள் கடத்தல்
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுபானங்களை வாகனங்களில் கடத்தி சென்ற 4 பேரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர்.;
கர்நாடகாவில் இருந்து மினி ஆட்டோவில் கட்டில், சோபா உள்ளிட்ட பொருட்களுக்கு நடுவே மது பாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுபானங்களை வாகனங்களில் கடத்தி சென்ற 4 பேரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.50 லட்சம் மதிப்பிலான 2073 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மது விற்பனை கூடங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலமாகவும், ரயில்கள் மூலமாகவும் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட எல்லைகள் மற்றும் மாநகர எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாநகர எல்லையான கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கட்டில், சோபா உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கோண்டு கன்னியாகுமரிக்கு சென்றுக்கொண்டிருந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் 1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான 734 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், முத்துவேல் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் கர்நாடகாவில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது 2.50 லட்சம் மதிப்பிலான 1,339 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணி மற்றும் சுப்பிரதீபன் இருவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.