கருப்பூரில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண்ணை கொன்றவர் கைது
கருப்பூரில், எலும்புக்கூடாக பெண் மீட்கப்பட்ட வழக்கில், அந்த பெண்ணை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
கருப்பூர் அடுத்த மூங்கபாடி ஊராட்சி டால்மியாபுரம் பர்ன் அன்கோ பின்புறம், கடந்த 1 ம் தேதி மனித எலும்புக்கூடு கிடந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கருப்பூர் போலீசார், எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த எலும்புக்கூட்டின் அருகே சேலை, பாவாடை, ஜாக்கெட் கிடந்தன. இதையடுத்து எலும்புக்கூட்டை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது பெண் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். பழைய சூரமங்கலம், நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தண்டோரா போட்டும் எலும்புக்கூடு இருந்த பகுதியில் கிடந்த சேலையின் புகைப்படத்தை காட்டியும் விசாரித்து வந்தனர்.
இதில், எலும்புக்கூடாக மீட்கப்பட்டவர் சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி என்பது தெரியவந்தது. இவருக்கும், வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த மார்ச் மாதம் ராஜேஸ்வரியை டால்மியாபுரத்துக்கு அழைத்து சென்ற பிரபாகரன், அங்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, ராஜேஸ்வரி பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரபாகரன், ராஜேஸ்வரியை கீழே தள்ளி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர் ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி, செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கொலை வழக்கில் சிக்கிய பிரபாகரன், வழிப்பறி வழக்கில் கைதாகி, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தற்போது ராஜேஸ்வரியை கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.