சேலம்: வனப்பகுதி நீர்நிலைகளில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதிப்பு

சேலத்தில், வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும், ஏரிகளிலும் குளிப்பதற்கு, வனத்துறை தடை விதித்துள்ளது.

Update: 2021-09-15 06:15 GMT

தடை தொடர்பாக, வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து கிழக்கு சரபங்கா மற்றும் மேற்கு சரபங்கா நதிகள் செல்கின்றன. இவை, வனப்பகுதியில் இருந்து  பல கிராமங்கள் வழியாக, ஓமலூர், தாரமங்கலம் சென்று எடப்பாடியில் உள்ள பூலாம்பட்டி அருகே,  காவிரி ஆற்றில் கலக்கிறது‌.

ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து உருவாகி வரும் சரபங்கா ஆற்றின் குறுக்கே பல இடங்களில்  தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள பல தடுப்பணைகள் நிரம்பி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பணைகளுக்குச் சென்று நீராடி மகிழ்கின்றனர்.

ஆனால், வெளியூரில் இருந்து வரும் பலருக்கு, தடுப்பணையின் ஆழம் பற்றி தெரியாததால், அசம்பாவிதங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த மாதம், சேலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஓமலூரை அடுத்த சக்கரை செட்டியப்பட்டி தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி சுபாஷ் என்ற 18 வயது மாணவன் உயிரிழந்தான்.

இதனை தொடர்ந்து, வனப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் நீர்நிலைகளில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைதல்,  மது அருந்துதல், வனப்பகுதியில் சமைத்தல், வன விலங்குகளுக்கு உணவு கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை செய்யக்கூடாது என்று, வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீறினால், வனத்துறை சட்டப்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News