16 பேருக்கு கொரோனா: கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

ஒரே கிராமத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.;

Update: 2021-04-22 16:15 GMT

ஓமலூரை அடுத்த காருவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மரக்கோட்டை கிராமத்தில் சுமார் 80 குடும்பங்களை சேர்ந்த 380-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வைரம் பட்டை தீட்டுதல், கொலுசு வேலை போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வேலை நிமித்தமாக அடிக்கடி பெங்களூரு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி மரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 4 பேர் பரிசோதனைக்காக காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காடையாம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மரக்கோட்டை கிராமத்திற்கு சென்று காய்ச்சல் அறிகுறி உள்ள 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒரே கிராமத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாதுபக்தசிங் தலைமையில் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மரக்கோட்டை கிராமத்திற்கு சென்று மருத்துவ முகாம் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் காடையாம்பட்டி தாசில்தார் அன்னபூரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்த கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தி வரும் குழுவினர் கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News