சேலத்தில் கடத்தப்பட்ட சிறுவன் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
சேலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஆறு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி கடந்த 22 ம் தேதி விளையாடச் சென்றபோது திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த 26ம் தேதி சிறுவனின் தாய் லதா பணியாற்றும் துணி கடை உரிமையாளர் சரவணன் என்பவரின் தொலைபேசிக்கு திருட்டு செல்பாேன் மூலம் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு சபரியை தான் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூபாய் 50 லட்சம் பணம் கொடுத்தால் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் 27ம் தேதி மற்றொரு திருட்டு செல்போன் மூலம் சிறுவனை கட்டிப்போட்டு அடைத்துள்ள வீடியோவை சரவணனுக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து மாயமான சிறுவன் கடத்தப்பட்டுள்ளார் என்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் சிறுவனை விரைந்து மீட்க ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்தார்.
இதையடுத்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பணத்திற்காக சிறுவனை குகை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரை கைது செய்த தனிப்படையினர் அவரின் பட்டறையில் அடைத்து வைத்திருந்த சிறுவனை மீட்டனர்.
கடந்த 6 நாட்களாக சிறுவனுக்கு உணவு ஏதும் வழங்கப்படாததால் மிகவும் பலவீனம் அடைந்த சிறுவனை போலீசார் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.