முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக வெளிநடப்பு
சேலத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலில் பாமக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிர்வாகிகள் அனைவரும் உள்ளே அனுமதிக்கபட்டனர்.
இதைத்தொடர்ந்து பாஜகவின் ஆலோசனை கூட்டத்திற்கு குறிப்பிட்ட சில நிர்வாகிகளை மட்டும் உள்ளே அனுமதிப்பதாக கூறியதால், பாஜகவினர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த அம்மா பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், பாஜகவினரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.