ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு: மர்ம நபர்களை கைது செய்ய விசிக போராட்டம்
ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் நாலுகால் பாலம் செல்லும் வழியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு உள்ளது . இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியோடினர்.
இன்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உடைக்கப்பட்ட சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுதொடர்பாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடைக்கப்பட்ட சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சிலை உடைப்புக்கு காரணமான நபர்களை கைது செய்து மீண்டும் அதே இடத்தில் சிலையை புதுப்பித்து நிறுவிட வலியுறுத்தி சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் தாசில்தார் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு செலவில் அம்பேத்கர் சிலை புதுப்பித்து அதே இடத்தில் நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தால் கொதிப்படைந்து விசிகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.