சேலத்தில் சாலையோரம் இருந்த டீக்கடையை அடைக்கச் சொல்லி சேர்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஓமலூரில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக ஜெய்சங்கர் என்பவர் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து செல்ல மாவட்ட எஸ்பி தீபாகனிகர் அறிவுறுத்தியிருந்தார்.
கடந்த 8 ம் தேதி இரவு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஓமலூர் - தாரமங்கலம் சாலையில் ரோந்து சென்றார். அச்சாலையில் மேச்சேரி பிரிவு ரோட்டில் புளியம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் டீக்கடையை திறந்து வைத்திருந்தார். அவரது கடைக்கு சென்ற இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஏன் வெளியில் டேபிள், சேர்களை போட்டுள்ளீர்கள் எனக்கேட்டு அதனை அடித்து நொறுக்கினார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து மாவட்ட எஸ்பி தீபாகனிகர் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். பின்னர் அது தொடர்பான அறிக்கையை சரக டிஐஜி பிரதீப்குமாருக்கு அனுப்பினார். அவர் துறை ரீதியான நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை தர்மபுரி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மேல் விசாரணை நடந்து வருகிறது.