டீ கடையை இன்ஸ்பெக்டர் அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக சேலம் எஸ்.பி 3 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மேச்சேரி பிரிவு சாலை பகுதியில் புளியம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் டீ கடை நடத்தி வந்தார். இரவு 10 மணிக்கு மேல் டீ கடையை திறந்து வைத்திருந்ததால் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அச்செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும் இது சம்பந்தமாக சேலம் எஸ்.பி. மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.