சேலத்தில் பல கோடி மோசடி: 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம் ஆடை தயாரிக்கும் முதலீட்டு நிறுவனம் பல கோடி மோசடி செய்துள்ளதாக கூறி, 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-09-27 08:30 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இ-டெய்லர் (E-tailors) என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், துணிகளை வெட்டும் இயந்திரம் மற்றும் துணிகள் கொடுத்து பணி வழங்கப்படும். பணிகளை முடித்துக் கொடுத்தால் மாத வருமானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதன் உரிமையாளர் திவாகர் என்பவர் முதலீடு தொடர்பாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு இருந்தார்.

இதனை நம்பி தமிழகம் முழுவதும்  400க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை முதலீடு தொகையாக பணம் செலுத்தி உள்ளனர். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக எந்த பணிகளும் வழங்காமல் நிறுவனம் ஏமாற்றி வருவதாக கூறி, பாதிக்கப்பட்ட நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு முற்றுகையிட்டனர். எனவே  முதலீடாக செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ளிட்ட மாநிலங்களில் கவனத்தை திருப்பி உள்ளதாகவும், அங்குள்ள பொதுமக்களிடம் பணத்தை  பெறுவதற்கு முன்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News