மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

மேட்டூர் அணை 120 அடியை எட்டிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.

Update: 2021-11-16 09:30 GMT

மேட்டூர் அணையில்  ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையிலிருந்து உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகூண்டு பகுதிக்கு 45 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டு உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகு ,அணைமின் மற்றும் சுரங்க மின் நிலையம் வாயிலாக காவிரி ஆற்றின் வழியாக உபரிநீரை 40 ஆயிரம் கன அடி முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் கிழக்கு மேற்கு கால்வாய் மூலமாக 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணை மின்நிலையம் சுரங்க மின் நிலையம் மற்றும் நான்கு கதவணைகள் மூலமாக 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சேலத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்ட 88 ஆண்டு வரலாற்றில் 41 ஆண்டாக 120 அடியை எட்டியது. கடந்த 4ஆம் தேதி 120 அடியை எட்ட இருந்த நிலையில் புயல் காரணமாக அதிக வெள்ளநீர் வர வாய்ப்பு இருந்ததால் 119 அடியிலே அணையின் நீர்மட்டம் தேக்கப்பட்டு வந்தது. அப்போது அணைக்க வந்த தண்ணீரை முழுமையாக உபரிநீராக வெளியேற்றப்பட்ட வந்தது.பின்னர் மழை பாதிப்புக்கான ரெட்அலாட் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 120 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேட்டூர் அணை 120 அடியை எட்டிய நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்றைய தினம்  அணையை ஆய்வு செய்தார். வலதுகரை பகுதி தண்ணீர் வெளியேற்றப்படும் இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். மேலும் அணையின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கூடுதலாக தண்ணீர் வரும்போது அவற்றை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்டு  வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் முறையாக கண்காணித்து வருகிறார்களே என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் வெள்ள கட்டுப்பாட்டு அறையின் பணியாற்றும் ஊழியர்கள் 24 மணி நேரமும் கவனமாக செயல்பட வேண்டும் என  அறிவுறுத்தினார்.  இதைத் தொடர்ந்து 16 கண் மதகு  பகுதியை ஆய்வு செய்தார். மேலும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் வெள்ள நீரில் அடித்து வரப்படும் நிலையில் துர்நாற்றம் வீசாமல் நுண்ணுயிரி கலவை கரைசல் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து திப்பம்பட்டி பகுதியிலுளள மேட்டூர் அணை உபரி நீர் நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்டப் பணிகள் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் உபரி நீரை நீரேற்று மூலமாக நான்கு ஏரிகளுக்கு கொண்டு செல்லும்  பணியை துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News