மேட்டூர் அணை நீரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைத்தார்
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைத்தார்.;
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது உரிய நேரத்தில் திறக்கப்படுவதால் டெல்டா மாவட்டத்தில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் பயன் பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றதும் முதன் முறையாக பதவியேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையை பார்வையிட்டு பின்னர் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் மலர்தூவி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
மேட்டூர் அணை வரலாற்றில் 1934 ஆம் ஆண்டு முதல் இதுவரை 87 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. தற்போது 88 ஆவது முறையாக இன்று அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது இதுவரை 17 முறையும், தற்போது 18 ஆவது முறையாக இன்று உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக 10 முறையும், காலதாமதமாக 60 முறையும் அணை திறக்கப்பட்டுள்ளது.தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 96.81 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு இன்று 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இன்று மாலைக்குள் படிப்படியாக 10000 கன அடியாக உயர்த்தப்பட்டு ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும் . ஜூலை மாதத்தில் 10000 கன அடியிலிருந்து படிப்படியாக 16000 கன அடியாக உயர்த்தியும் ஆகஸ்ட் மாதத்தில் 18000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும் .
குறுவை பாசனம் நாமக்கல் , கரூர் , திருச்சி , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 491200 ஏக்கர் நிலமும் , கடலூர் மாவட்டத்தில் 30800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும் . நடப்பாண்டில் காவேரி டெல்டா விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் , நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்து பயன்படுத்த , பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும் , மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.