நிலம் மீட்டு தரக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி
சேலத்தில், ஆக்கிரமிப்பு விளைநிலத்தை மீட்டுத்தரக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு, முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்த நரசிம்மராஜ் (63) என்பவர், தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். வயது மூப்பு காரணமாக விவசாயம் பார்க்க முடியாமல், 2003 ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிகளான கோவிந்தன், குமார் ஆகிய இருவரிடம் குத்தகைக்கு நிலத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, திரும்ப தராமல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி, பாதிக்கப்பட்ட முதியவர் நரசிம்மராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, இன்று தீக்குளிக்க முயன்றார்.
உடனே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு, சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தை ஆக்கிரமித்த நபர்களிடமிருந்து விவசாய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று, கண்ணீர் மல்க, நரசிம்மராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.