நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை: திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி
நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட மாணவனின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.;
நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் என்பவரின் மகன் தனுஷ். இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றதால், இன்று நடக்கும் நீட் தேர்வுக்கு பயந்து அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தனர். பின்னர் கார் மூலமாக கூளையூர் வந்து, தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மாணவனின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 10லட்சம் ரூபாய் பணத்தை மாணவரின் பெற்றோரிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளரிடம் உதயநிதி ஸ்டாலின், நீட்தேர்வு நிரந்தரமாக வேண்டாம், நீட் தேர்வால் ஒட்டுமொத்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் இதற்கு முயற்சி எடுப்போம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம். இதேபோல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் ஒன்றிய அரசு, செவிசாய்க்காததால் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகிறது. மாணவன் தனுஷ் உயிரிழப்பு மிகுந்த வேதனையைத் தருகிறது.
நீட்தேர்வு நிராகரிக்கப்பட வேண்டும் என நாளை சட்டசபையில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். ஏற்கனவே அதிமுக அரசு இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் தான் ஆகிறது. குறுகிய காலத்தில் சட்டப் போராட்டம் நடத்த இயலவில்லை. தமிழக முதல்வர் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் பேசி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசிடம் தீவிரமாக வலியுறுத்த உள்ளனர். இது ஒரு சில மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல; எல்லா வீட்டு மாணவர்களின் பிரச்சனையாகும். எனவே தான் நீட்தேர்வு நிச்சயம் வேண்டாம் என தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
திமுக ஆட்சி மாணவர்களுக்கு துணையாக இருக்கும். எனவே மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் மாணவர்களின் மருத்துவ கனவுக்கு திமுக துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
இதனிடையே தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாணவன் தனுஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மாணவரின் தந்தையிடம் தங்கள் மகன் அவஸ்தைப்பட்ட இந்த முடிவை எடுத்துவிட்டார் தைரியமாக தேர்வை எழுதி இருக்கலாம் என்றார்.
மேலும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அலைபேசி மூலம் தனுஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.