ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் கணக்கில் இருந்து ரூ. 10 லட்சம் மோசடி! வங்கி ஊழியருக்கு தொடர்பு?
சேலத்தில், ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர். இவர், தனது ஓய்வூதியத்தொகை, 10 லட்சம் ரூபாயை கடந்த ஜனவரி மாதம் தனது வங்கி கணக்கு உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மேட்டூர் கிளையில், ஒருவருட வைப்பு நிதியாக செலுத்தி உள்ளார்.
இதனிடையே, கடந்த 10ம் தேதி செல்லம்மாளின் தொலைபேசியில் அழைத்த நபர், உங்களுக்கு புதிய பாஸ் புத்தகம் வந்துள்ளது என்றும், அதற்கு உங்களுக்கு செல்போனில் வந்துள்ள ஓ.டி.பி. எண் தெரிவிக்கும்படி கூறி உள்ளார். அதன்படி செல்லம்மாளும் ரகசிய ஓ.டி.பி. எண்ணை தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் இவரது வங்கி கணக்கில் இருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாயை பல்வேறு வங்கி கணக்கிற்கு நெட்பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வங்கிக்கு சென்று கேட்டபோது, வங்கி ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியதுடன், சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி கூறிவிட்டனர். இது தொடர்பாக செல்லம்மாள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது மகன் ராஜராஜனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த செல்லம்மாள், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நெட்பேங்கிங் ரகசிய குறியீட்டை பெற்றுக் கொண்டு, எனது வங்கி கணக்கில் இணைந்து அதில் உள்ள டெபாசிட் தொகையை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.
டெபாசிட் செய்யப்பட்ட தொகையை, நேரில் சென்றுதான் பெறமுடியும் என்ற நிலையில் நெட்பேங்கிங் மூலம் தனது பணம் முறைகேடாக பரிவர்தனை செய்யப்பட்டதற்கு வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தனது பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்று, அவர் கேட்டுக்கொண்டார்.