முல்லைப் பெரியாறு உரிமைகள் எம்ஜிஆர் ஆட்சியிலேயே விட்டுக்கொடுப்பு - துரைமுருகன
முல்லைப் பெரியாறு உரிமைகள் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே விட்டுக்கொடுக்கப்பட்டது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உபரிநீர் பயன்பாட்டு திட்டத்திற்காக திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன் சேலம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நடப்பாண்டில் உபரிநீரை ஏரியில் நிரப்பும் பணியினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, முத்தாம்பட்டி ஏரி மற்றும் மானத்தாள் ஏரி ஆகிய நான்கு ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படும்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அரைகுறையாக விடப்பட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே செல்கிறது.உபரிநீர் திட்டத்தை திமுக ஆட்சிதான் முழுமையாக நிறைவேற்றும் என்று கூறினார்.மேலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு உபரிநீர்த்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எம்ஜிஆர் காலத்துலேயே உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. கேரள, கர்நாடகத்தில் தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எந்த புதிய அணையும் கட்ட திமுகவும சரி அதிமுகவும் சரி அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறினார்.