121 நாட்களுக்கு பிறகு 99 அடிக்கு சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

Update: 2021-03-28 06:30 GMT

121  நாட்களுக்கு பிறகு 100 அடியாக  இருந்த  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.93 அடியாக  சரிந்தது.

தமிழக -கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது.மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  குறைவாக உள்ளது. இன்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68 கனஅடி  நீர்  வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம்  99.93 அடியாகவும், நீர் இருப்பு 64.75 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், நேற்று 100.05  அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  99.93  அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1997 -98 -ல் 230 நாட்களும், 1990 -2000 -ல் 233 நாட்களும், 2010 - 11-ல் 228 நாட்களும், 2019 -2020 -ல் 293 நாட்களும் நீர்மட்டம்  100 அடியில் இருந்துள்ளது. இதில் கடந்த  2020  ஆம் ஆண்டில் மட்டும் 01.06.2020, 25.06.2020, 13.10.2020, 24.10.2020 என 4 முறை அணை நீர் மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் 121 நாட்கள் 100 அடியில் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News