மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்: விரைவில் 120 அடியை எட்டும்
நீர் வரத்து எதிர்பார்த்த அளவு வராததால் உபரி நீர் திறப்பு நிறுத்தம்; அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும்.
மேட்டூர் அணையில் இன்று பகல் 12:00 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 16,020 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.
120 அடி உயரம் நீர் தேக்கும் அளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்ததும், அணையின் பாதுகாப்பு கருதி நவம்பர் 9-ம் தேதி காலை 5:00 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.
விநாடிக்கு 20,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், நீர் வரத்திற்கு ஏற்ப அவ்வப்போது குறைத்து வெளியேற்றப்பட்டது. இன்று காலை 8:00 மணி நிலவரப்படி 12,000 கன அடி வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 119 அடியிலேயே பராமரிக்கப்பட்டது.
நீர் வரத்து எதிர்பார்த்த அளவு வராததாலும், மழை நின்றதாலும் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.