சேலத்தில் குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபம்: எடப்பாடி பழனிச்சாமி திறப்பு
சேலத்தில் காங்., மூத்த நிர்வாகி குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் முதல்வர் காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவருமான குட்டப்பட்டி நாராயணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது சொந்த ஊரான குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதநாயக்கன்பட்டியில் அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இணைந்து நாராயணனுக்கு மணிமண்டபம் கட்டி உள்ளனர். இதனை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பங்கேற்று திறந்து வைத்தார்.
குட்டப்பட்டி நாராயணன் கடந்த1953 முதல் 2019 வரை குட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து பதவி இருந்துள்ளார். இதனிடையே 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், நாமக்கல், தருமபுரி ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
காமராஜர் எவ்வாறு எளிமையாக வாழ்ந்தாரோ அதையே பின்பற்றி இறப்பு வரை எளிமையாக வாழ்ந்து மறைந்தார். மணிமண்டபத் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் தலைவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் குட்டப்பட்டி நாராயணன் என்றும், அவரின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைவதாகவும் கூறினார்.
இந்த மாவட்டமும், குட்டப்பட்டி கிராமமும் இவரால் வளர்ச்சி அடைந்தது. இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய குழந்தைகள் படிப்பதற்காக தனது நிலத்தையே தானமாகக் கொடுத்து பள்ளிக் கூடம் அமைத்து காமராசர் கையால் திறந்து வைத்த பெருமை இவரையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.