திமுக நிர்வாகி கொலை மிரட்டல்: ஆசிரியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.;
தீக்குளிக்க முயற்சித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்தினருடன் போலீசார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் குஞ்சாண்டியூர் அருகே உள்ள கோனூர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் வெங்கடாஜலம். இவர் மேட்டூர் அருகே உள்ள திம்மம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, கடந்த 1998ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
கோனூர் பகுதியில் உள்ள இவரது வீட்டின் அருகே திமுக நிர்வாகி வைரமணி குடியிருந்து வருகிறார். இவர்களில் இருவர் வீட்டிற்கும் அருகே பொதுவான இடம் உள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள் மனோரஞ்சிதம் அந்த இடத்தில் காய் தரும் மரம் மற்றும் பூச்செடிகளை வைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திமுக நிர்வாகி வைரமணி அத்துமீறி நுழைந்து பராமரிக்கப்பட்டிருந்த பூச் செடி மற்றும் காய் தரும் மரங்களை அப்புறப்படுத்தி நிலத்தையும் இரண்டடி அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மகள் மனோரஞ்சிததிற்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாஜலம் அவரது மகள் மனோரஞ்சிதம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 8 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக நிர்வாகி வைரமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயற்சி ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.