தொழிலாளியை கொலை செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளி கொலை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார், கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி எலிக்கரடு பகுதியில் உள்ள கால்வாய் பாலம் அருகே தனது உறவினர்கள் சிலருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மேட்டூர் பொன்நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் அங்கு வந்தனர். இதையடுத்து மது வாங்கி வருவது தொடர்பான பிரச்சினையில் ஜெகதீஸ்குமாருக்கும், தமிழரசன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெகதீஸ்குமார் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய சிறுவன், சிறார் என்பதால் அவனுடைய வழக்கு விசாரணை தனியாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கொலை வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது கொலை வழக்கில் தமிழரசன், கார்த்திக் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு இருவருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.