முழு கொள்ளளவை எட்டும் நிலையில் மேட்டூர் அணை
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணி நிலவரப்படி 119.43 அடியாக உள்ள நிலையில், விரைவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.;
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணி நிலவரப்படி 119.43 அடியாக உள்ள நிலையில், விரைவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது.
இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மளமளவென அதிகரித்தது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 62,870 கன அடியாக இருந்த நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 54,459 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று (29ம் தேதி) மாலையை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்துள்ளதால், அணை நிரம்புவது சற்று தாமதமாகி உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 119.43 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.
அணை நிரம்பும் பட்சத்தில் உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.