சேலத்தில் பெய்த தொடர் கனமழை: தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி
சேலத்தில் பெய்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதில் சேலம் அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், அயோத்தியாபட்டினம், சீலநாயக்கன்பட்டி, மல்லூர், ஐந்துரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சேலம் மாநகரில் பகுதிகளில் குளிர்ச்சியான நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக மாநகர பகுதியில் மழையின் அளவு அதிகளவில் பதிவாகி வருகிறது. நேற்றைய தினம் மாநகரப் பகுதியில் 54 மில்லி மீட்டர் அளவும், மாவட்டம் முழுவதும் 223 மில்லிமீட்டர் அளவிற்க்கும் மழையின் அளவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் மாலை நேரத்தில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.