சேலத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வாக்கு செலுத்திய அரசு பள்ளி ஆசிரியர்
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சிலுவை, விபூதி பட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பி அணிந்து வாக்கு செலுத்திய ஆசிரியர்.;
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கழுத்தில் சிலுவை, நெற்றியில் விபூதி பட்டை, தலையில் இஸ்லாமியர் அணியும் தொப்பியையும் அணிந்து வந்து தனது வாக்கினை செலுத்திய ஆசிரியர்.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி தேர்தலில் 22வது வார்டில் வாக்குப்பதிவு செலுத்த வந்த வெள்ளரிவெள்ளி பஞ்சாயத்தக்கு உட்பட்ட வேப்பமரத்து பட்டி அரசு பள்ளி ஆசிரியர் கந்தவேல் என்பவர், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கழுத்தில் கிறிஸ்தவர் அணியும் சிலுவை மாலையும், இந்துக்கள் முறைப்படி நெற்றியில் விபூதி பட்டையும், தலையில் இஸ்லாமியர் அணியும் தொப்பியையும் அணிந்து வந்து தனது வாக்கினை செலுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில் பொதுமக்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்கு செலுத்த வேண்டுமென்றும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற மதநல்லிணக்கத்தை வலியுறுத்தவே இவ்வாறு வேடமிட்டு வாக்களிக்க வந்தேன் என்று அவர் கூறினார்.