எடப்பாடி நகராட்சி தலைவர் வேட்பாளர் மாற்றி அறிவிப்பு: ஆதரவாளர்கள் சாலை மறியல்
எடப்பாடி நகராட்சியில் தலைவர் வேட்பாளரை மாற்றி அறிவித்ததால் கவுன்சிலர்களை அழைத்துச் செல்லக் கூடாது எனக்கூறி ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் நகர்புற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது திமுக சார்பாக பருவத ராஜா குல வம்சத்தை சேர்ந்த மாதையன் என்பவரை அறிவித்து தேர்தலை சந்தித்தன.
இதில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பாக 16 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பாக ஒருவரும், பருவதராஜகுல வம்சத்தை சேர்ந்த திமுகவைச் சார்ந்த 5 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் வெற்றிபெற்ற நிலையில் திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல், எடப்பாடி திமுக நகர செயலாளராக பதவி வகித்துவரும் பாஷா என்பவரை நகராட்சித் தலைவராக திமுக தலைமை அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பருவதராஜகுல வம்சத்தைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதே இனத்தைச் சேர்ந்த கவுன்சிலரையும் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க அழைத்துச் செல்லக் கூடாது என கவுன்சிலர் மாதையனின் ஆதரவாளர்கள் வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். தற்போது எடப்பாடியில் தலைவர் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.