எடப்பாடி அரசு மருத்துவமனை அருகே தீப்பற்றி எரிந்த கார்: உயிர்சேதம் தவிர்ப்பு
எடப்பாடி அரசு மருத்துவமனை அருகே ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
தீப்பற்றி எரிந்த கார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியை சேர்ந்த மணியின் மகன் ஞானபாலாஜி (25) சொந்தமாக ஆம்னி கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இன்று திருச்செங்கோட்டிலிருந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வாடகைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது சேலம் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருக்கும்போது, காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து உள்ளேயிருந்து புகை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ஓட்டுநர் ஞானபாலாஜி சாலையின் ஓரமாக காரை நிறுத்தியுள்ளார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலும் அணைத்தனர் இதனால் காரில் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயமும் இன்றி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.