எடப்பாடி அருகேகூட்டுறவு சங்கத்தில் இறந்துபோன விவசாயிக்கு ரூ 1.20 லட்சம் கடன்
விவசாயி ஒருவருக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது
எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்கத்தில் இறந்துபோன விவசாயிக்கு ரூ 1.20 லட்சம் கடன் வழங்கிய கூட்டுறவு நிர்வாகம்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு விவசாயி ஒருவருக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. வேட்டுவப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி(58.). சங்க உறுப்பினரான இவர் 2012 ஜனவரி 19ல் இறந்துவிட்டார். இந்நிலையில் இவர், 2019ல் கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதை கட்ட அறிவுறுத்தியும் கூட்டுறவு சார் பதிவாளர் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி இவருக்கு சம்மன் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து ராமசாமியின் மகன் சித்துராஜ் கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆஜராகி தந்தை இறந்ததைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் 2016, 2021ல் தள்ளுபடி செய்த விவசாய கடன்கள் பற்றிய விவரங்களை முழுமையாக விசாரித்து முறைகேடான கடன்களை வசூலிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமசாமியைப் போல, பல பேரின் பெயரில் போலியாக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களது பெயரில் வழங்கபட்ட கடன் சில நபர்களால் பெறப்பட்டு அவர்கள் தவறான முறையில் ஆதாயம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கி தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.