தனி விமானம் மூலம் சேலம் புறப்படும் முதல்வர்: நாளை விழா ஏற்பாடுகள் தீவிரம்

Salem News Today: சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதையொட்டி, அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-10 05:44 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட நாளை (11.06.2023) தமிழக முதல்வர் வருகைதரவுள்ளதையொட்டி, கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் விழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த சில நாட்களாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


சேலம் மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் தமிழக முதல்வர், சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து, சேலம், பழைய பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார்.

மேலும், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஒரு இலட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைக்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறவுள்ளது. பின்னர், நாளை மறுநாள் (12.06.2023) காலை 8 மணி அளவில் காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், நேற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் விழா பந்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் பலர் உள்ளனர்.

இதனிடையே மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை சேலம் செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்லும் அவர், அம்மாவட்ட திமுக நிர்வாகிகளின் கூட்டத்திலும் கலந்துக்கொள்ள உள்ளார்.

Tags:    

Similar News