சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி வாலிபர் மரணம்: சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே, சோதனைச்சாவடியில் போலீசார் தடியால் தாக்கியதில், போதையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2021-06-23 07:00 GMT

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, கோவை,உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுக்கடை திறக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால், மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு,  பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் இருசக்கர வாகனத்தில், மதுபோதையில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ  மற்றும் உடனிருந்த போலீசார், போதையில் இருந்த இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை பெரம்பால் தாக்கியுள்ளனர்.

இதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். முருகேசனை போலீசார் பெரம்பால் தாக்குவதை சக நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது போலீசார் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே, போலீசார் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்த முருகேசனை, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று,  பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

இதையடுத்து, முருகேசனின் உறவினர்கள் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக வேண்டும் கோரிக்கைை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம், சேலம் மாவட்டத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News