சேலத்தில் போலீஸ் தாக்குதலில் வியாபாரி பலி - வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்

ஏத்தாப்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்ததற்கு, வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-24 13:31 GMT

காவல்துறையினர் தாக்கப்பட்டதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.

சேலம் மாவட்டம்  இடையப்பட்டியை சேர்ந்த விவசாயி மற்றும் மளிகைக்கடை வியாபாரி  வெள்ளையன் என்கிற முருகேசன். இவர் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி  சோதனைச்சாவடியில்  இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார்,  சோதனையிட்டனர்.

இது தொடர்பாக போலீசாருக்கும் முருகேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு, போலீசார் அடித்ததில் முருகேசனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து சேலம் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி நேரில் சென்று விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எஸ்எஸ்ஐ மீது வழக்குப் பதிவு செய்து  கைது செய்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, தலைமை செயலர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்,  இன்று நேரில் சென்று சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.  ஏத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளரை சந்தித்த பின்னர், உயிரிழந்த வணிகர் முருகேசன் இல்லத்திற்கு சென்று அவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

அத்துடன், முருகேசன் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூபாய் ஒரு லட்சம் உதவி தொகை வழங்குவதாகவும், அவரின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு,  மாநில பேரமைப்பு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் விக்கிரமராஜான் உறுதியளித்தார். காவல்துறையினரின் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

Tags:    

Similar News