முதல்வர் நிகழ்ச்சிக்கு சிறுவன் ஓட்டிவந்த வாகனம் விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்
சேலத்தில் முதல்வர் நிகழ்ச்சிக்கு சிறுவன் ஓட்டிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசு விழா சீலநாயக்கன் பட்டி அருகில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக சேலம் மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில் சேலம் பெத்தநாயக்கன் பாளையம், சின்னமசமுத்திரம் பகுதியில் இருந்து திமுகவினர் வந்த சிறிய சரக்கு வாகனம் காளிசெட்டியூர் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 30 பேர் பயணித்த அந்த வாகனத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11ம் வகுப்பு படித்துவரும் மோகன்ராஜ் என்ற சிறுவன் இந்த வாகனத்தை ஓட்டிவந்த காரணத்தாலேயே விபத்து ஏற்பட்டதாக அதில் பயணித்தவர்கள் கூறினர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.