உக்ரைனில் தவிக்கும் சேலம் மாணவர்கள்: ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மனு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் சேலம் மாவட்ட மாணவ, மாணவிகளை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அங்கு வசிக்கும் வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை மீட்டுத்தர கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
சேலம் குரங்குசாவடி பகுதியை சேர்ந்த விஸ்வநாத் என்பவர், உக்ரைனில் 6 ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் அவரது மகள் ஹரிபிரியாவை பத்திரமாக மீட்டுத்தரக்கோரி மனு அளித்துள்ளார்.
இதேபோல் ஆத்தூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர், உக்ரைனில் 4 ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் அவரது மகள் ரித்திகாவை பத்திரமாக மீட்டு தரக்கோரி மனு அளித்துள்ளார். இதுவரை 6 பேர் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, உக்ரைனில் சிக்கியுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வருவதாகவும், அவர்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.