சினிமா விநியோகஸ்தர் மர்மமான முறையில் மரணம்: தற்கொலையா? போலீசார் விசாரணை
சேலத்தில் தங்கும் விடுதியில் சினிமா விநியோகஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.;
சேலத்தில் தங்கும் விடுதியில் சினிமா விநியோகஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் டவுண் ரயில்வே நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆத்தூரை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் ஜெயசீலன் என்பவர் கடந்த 27 ம் தேதி முதல் தனி அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் காலையில் அறையை சுத்தம் செய்வதற்காக விடுதி பணியாளர் அறையை தட்டியபோது நீண்ட நேரம் ஆகியும் ஜெயசீலன் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பணியாளர் டவுண் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது படுக்கையில் ஜெயசீலன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர், பலரிடம் பல லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், கடன் தொல்லை காரணமாக விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் நேற்று இரவு அவர் அதிகளவில் மது அருந்தி இருந்ததால், இயற்கையாக இறந்தாரா அல்லது கடன் தொல்லையால் மதுவுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.