ஆத்தூர்: ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்
சேலம் ஆத்தூரில், மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உற்பத்தியாகும் மரவள்ளி கிழங்குகள், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு சேகோசர்வ் ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு மரவள்ளிக்கிழங்கு தரம் பிரிக்கப்பட்டு ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் அதிகமாக, 127 தனியார் ஜவ்வரிசி தயாரிப்பு ஆலைகள், ஆத்தூரில் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 11 லட்சம் ஏக்கர் அளவில் மரவள்ளிக் கிழங்கு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நம்பி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சேலத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியில், மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் தமிழக முதல்வர் விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில் அரசு சேகோ ஆலையின் கிளையை, ஆத்தூரில் அமைத்து தர வேண்டும் மற்றும் மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தில் மாவுபூச்சி தாக்குதல் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் முன்வைத்தனர்.
ஜவ்வரிசியில் கலப்படம் என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது. மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் தொடர்ந்து அரசிற்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர், ஆத்தூரில் உள்ள தனியார் சேகோ தொழில் நிறுவனத்தில், நவீன முறையில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்படுவதை முதல்வர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சேகோசர்வ் நிறுவனத்தின் சார்பாக ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 2 திட்ட பணிகளை திறந்து வைத்தார்.